×

3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை

சண்டிகர்: அரியானாவில் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் பெற்றதால் பா.ஜ அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு 2019ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை எந்த கட்சியும் பெறாததால் 40 இடங்கள் பெற்ற பா.ஜ, சுயேட்சைகள் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. முதல்வராக மனோகர்லால் கட்டார் பதவி ஏற்றார்.

துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவி ஏற்றார். மக்களவை தேர்தலுக்கு முன்பு அரியானாவில் திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. மார்ச் 12ம் தேதி திடீரென முதல்வர் மனோகர்லால் கட்டார் பதவி விலகினார். அதனால் அவரது அமைச்சரவை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து துணை முதல்வராக இருந்த ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா பதவியும் தானாக பறிபோனது. புதிய முதல்வராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றார். ஆனால் அவரது அமைச்சரவையில் துஷ்யந்த்சிங் சவுதாலா இடம் பெறவில்லை.

மேலும் அவரது கட்சியையும் பா.ஜ உடைத்தது. இந்த சூழலில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய கட்டார், அவரது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் அவர் கர்னல் மக்களவை தொகுதியில் பா.ஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் ரானியா தொகுதி எம்எல்ஏ ரஞ்சித்சிங் சவுதாலாவும் தனது எம்எல்ஏ பதவியை மார்ச் 26ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 45ஆக குறைந்தது. இருப்பினும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பா.ஜ ஆட்சி நீடித்து வந்தது.

இந்த நிலையில் அரியானாவில் உள்ள 10 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வந்த நிலையில் ஆளும் பா.ஜ அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக 3சுயேச்சை எம்எல்ஏக்கள் நேற்று அறிவித்தனர்.

அரியானா சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏக்களாக உள்ள சோம்பிர் சங்வான், ரந்தீர் கோலன், தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் பா.ஜ அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். ரோத்தக் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் முன்னிலையில் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனால் அரியானாவில் உள்ள பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. அரியானா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற வேண்டும். இப்போது பா.ஜ அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டப்பேரவைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

* ஆதரவு வாபஸ் ஏன்?
அரியானா பா.ஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது ஏன் என்பது குறித்து சுயேட்சை எம்எல்ஏ தரம்பால் கோண்டர் கூறியதாவது: நாங்கள் பா.ஜ அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். நாங்கள் காங்கிரசுக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம். விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

*முதல்வர் பதவி விலக வேண்டும்
காங்கிரஸ் மாநில தலைவர் உதய் பன் கூறுகையில், ‘சோம்பிர் சங்வான், ரந்தீர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு ஆதரவளித்துள்ளனர். 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவையில் தற்போதைய பலம் 88 ஆகும்.

அதில் பா.ஜவுக்கு 40 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். முன்பு ஜனநாயக ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு இருந்தது. ஆனால் அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்று விட்டதால் முதல்வர் நயாப் சிங் சைனி அரசு இப்போது சிறுபான்மை அரசாக உள்ளது. முதல்வர் பதவியில் ஒரு நிமிடம் கூட இருக்க சைனிக்கு உரிமை இல்லை என்பதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் சட்டப்பேரவை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்’ என்றார்.

The post 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Aryana ,Congress ,Chandigarh ,BJP government ,Haryana ,Aryana Legislative Assembly ,Dinakaran ,
× RELATED அரியானா அரசியலில் பரபரப்பு...